சென்னை:  அரசியல் சட்டத்தின் 200வது பிரிவை ஆளுநர் படிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி உள்ளார். இதனால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, மீண்டும் பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,  ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியது குறித்து சபாநாயகர் பேட்டியளித்தார்.  அப்போது, கடந்த 2022 அக்டோபர் 1ல் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அவசர சட்டத்துக்கும், சட்ட மசோதாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காலம் தாழ்த்தப்பட்டு கடைசியாக ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ள என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார் என கேள்வி எழுப்பியவர், ஆளுநர்களின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது. மாநில அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எடுத்துக் கூறியுள்ளது. ஆளுநர் சரியான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம் என்பதே என் கருத்து என கூறிய சபாநாயகர்,  அரசியல் சட்டத்தின் 200வது பிரிவை ஆளுநர் படிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்த அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கொண்டு வரவில்லை. ஆரம்பத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆதரவாகத்தான் இருந்தார். ஆளுநருக்கு எங்கிருந்து எந்த அழுத்தம் வந்ததோ தெரியவில்லை என்றவர்,  ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் தாமதப்படுத்தியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.