சேலம்: கடன் பிரச்னையால் கணவன், மனைவி தற்கொலை அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பெயர் விஜயா. தங்கராஜ் ஐந்து ரோடு தொழில்பேட்டை பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு சரியான முறையில் தொழில் கிடைக்காத நிலையில், தனியாரிடம் கடன் வாங்கி, லேத் பட்டறையை விரிவாக்கம் செய்துள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறாததால், வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த சூழ்நிலையில், அவருக்கு  கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பிக்கேட்டு, டார்ச்சர் ‘செய்து வந்ததாக கூறப்படுகிறது.  நேற்றும் (11ந்தேதி) கடனை திருப்பி கேட்டு சிலர் வந்து அநாநகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால்,   மனமுடைந்த தங்கராஜ், பட்டறையிலே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கி கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு,   சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், தங்கராஜ் சிகிச்சை,  பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது மனைவி விஜயாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த விஜயா, அழுதுபுரண்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தார். அங்கு கணவர் இறந்ததை உறுதி செய்ததும்,  மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறைக்குள் சென்று  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. இதையடுத்து, அங்கு வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடன் கொடுத்தவர்களின் விவரங்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.