சென்னை: மதுரையில் இன்று ஆன்லைன் ரம்மியால் இளம் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரையைச்சேர்ந்த மகாலட்சுமி – முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இதில் 26 வயதுடைய குணசீலன் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அவர் செல்போனில் சாதாரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்தவர், நாளடைவில் அதற்கு முழுமையாக அடிமையாக தொடங்கியுள்ளார். இதனால் கல்லூரிக்கு செல்லாமல் பணத்தையும் ஆன்லைன் ரம்மி மூலமாக இழந்துள்ளார். இதனையடுத்து குணசீலனின் தம்பி பசுபதி அண்ணனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனை அடைக்க கொடுத்ததோடு, மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிவதற்காக அழைத்து வந்து பணியில் சேர்த்துள்ளார்.

அங்கு கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்த குணசீலன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனால் மேலும் அதிக அளவிலான பணத்தை இழந்த குணசீலன் பல்வேறு நபர்களிடம் கடனை வாங்கி அதன் மூலமாகவும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதனால் கடனாளியான அவர், வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாதது குறித்து தனது நண்பர்களிடம்  புலம்பியுள்ளார். மேலும் கடும் மனஅழுத்ததுக்கும் ஆளாகி உள்ளனார்.  இந்த நிலையில், அவர்  தங்கியிருந்த வீட்டில் நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி இறுதியாண்டு படித்து வந்த குணசீலன், கடைசி செமஸ்ட்டர் எழுதமலேயே இப்படியொரு நிலையை தேடிக்கொண்டது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவிவில்,  மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 42ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 13ஆவது தற்கொலை இது. இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும், இந்த தற்கொலைக்கும் ஆளுநரே பொறுப்பேற்கவேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 112 நாட்கள் ஆகிவிட்டன. அதுகுறித்து ஆளுநர் எழுப்பிய ஐயங்களுக்கு, சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் விளக்கம் அளித்து 68 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சட்டத்திற்கு இன்றுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையல்ல.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த அரசின் விளக்கங்கள் மனநிறைவு அளித்தால் ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் திருப்பி அனுப்ப வேண்டும். இரண்டையும் செய்யாமல் சட்டத்தை கிடப்பில் போட்டு, ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக ஆளுநருக்கு அரசு அழுத்தம் தரவேண்டும்; இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.