சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று காலை கவர்னரை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்கும் உரிமைக்கோரி கடிதம் கொடுத்த நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து, ஆட்சி அமைக்க வரும்படி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநரின் தனிச்செயலாளர் அனந்தராவ் படேல் வழங்கினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இதில், தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, இன்று காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்று சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க் களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். பின்னர் அங்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் தேனீர் வழங்கினார்.
நாளை மறுநாள் 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். இதையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின ஆட்சி அமைக்க கவர்னர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான கடிதத்தை கவர்னர் மாளிகை அதிகாரி ஸ்டாலினிடம் நேரில் ஒப்படைத்தார்.