விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவு

Must read

சென்னை: விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது.

விதிகளை மீறி அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, பேனர்களை வைக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள உயர்நீதிமன்றம்  விதிகளை பின்பற்றாமல்  பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று அரசுக்கு பல முறை உத்தரவிட்டு உள்ளது. இருந்தாலும் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே திமுகவினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்காக பேனர் வைக்கப்பட்டபோது, அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து, 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது சர்ச்சையைனது.  இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில், ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும்,  விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில், நேற்று மீண்டும் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத்  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில்,  எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்த திமுக தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேனர்கள் வைக்க கூடாது என்று திமு கழகத்தினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதே போல் பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளதாக கூறப்பட்டது.

இதை பதிவு செய்த   நீதிபதிகள், விதிகளை பின்பற்றாமல்  பேனர் வைக்க அரசு அனுமதிக்கக்கூடாது என்றும், பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று முதல்வர் கூறினால் மட்டும் போதாது, பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியதுடன்,  சட்டவிரோத பேனர் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு இது ஆளுங்கட்சிக்கு மட்டுமானது மட்டுமல்ல  அனைத்து கட்சிக்குமானது என்றும் தெரிவித்தனர்.

More articles

Latest article