டில்லி:

என்ஆர்ஐ ஒதுக்கீடு பெற்றுள்ள சில மாநிலங்களை சேர்ந்த அரசு மருத்துவக் கல்லூரிகள், அந்த இடங்களை வசதியானவர்களுக்கு விற்பனை செய்வது வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்காக நீட் தேசிய நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன்மூலமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், சில மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கென சில சதவிகிதங்கள் ஒதுக்கீடு (NRI Quota) வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  மாநில அரசுகளே இதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

தற்போதைய நிலையில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவை என்.ஆர்.ஐ ஒதுக்கீடுகளுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுள்ளன.

இந்த கல்லூரிகளில்  என்.ஆர்.ஐ க்காக 3% -15% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, சிலவற்றில் “மேலாண்மை ஒதுக்கீடுகள்” (Management Quota) கூட உள்ளன.

இந்த இடங்களை அங்கு  ஆட்சி செய்து வரும் மாநில அரசுகள் சுய நிதியுதவி மருத்துவக்கல்லூரி கள் போல,  மருத்துவக் கல்வியை வணிகமயமாக்கும்  செயலில் ஈடுபட்டு வருகின்றன. இங்குள்ள என்ஆர்ஐ கோட்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்ஆர்ஐ கோட்டாவில் யாரும் சேராத நிலையில், அந்த இடங்களை மாநில அரசுகள் பலகோடிக்கு விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஏழை எளிய மக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் மருத்துவம் படிக்கும் வகையிலேயே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளதாக மத்தியஅரசு மார்தட்டிக்கொள்ளும் நிலையில், என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கான இடங்களை மாநில அரசுகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வரும்  செயல்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.