சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு, கொரோனா நெகடிவ் என மருத்துவமனைகள் சான்றிதழ் வழங்குகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை போடுகிறது என சர்ச்சைகள் எழுந்துள்ளன. தென்மாவட்டங்களில் இதுபோன்ற சான்றிதழ்கள் அதிக அளவில் வழங்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்களை உடனே எரியூட்டச் கட்டாப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா முதல் அலையின் போது ஐசிஎம்ஆர் வகுத்த வழிகாட்டுதலின்படியே இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும் பதில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆனால், மாநில அரசு உயிரிழப்புகளை வெகுவாக குறைத்தே காண்பித்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் 25 சதவிகிதம் மட்டுமே அரசு தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை மருத்துவமனை ஊழியர்களும், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களே கூறி வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா என கூறி சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனைகள், சிகிச்சை பலனின்றி சிலர் இறக்கும்போது, அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என சான்றிதழ் கொடுக்கிறது. மேலும், இறந்தவர்களின் உறவினர்களிடம் உடனே உடலை தகனம் செய்யும் என மருத்துவமனை ஊழியர்களும், காவல்துறையினரும் வலியுறுத்தி, தகனம் செய்ய செய்கின்றனர். இது கிராம மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை இதுபோன்ற ஒரு துயர சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. தொடர் காய்ச்சல் காரணமாக  கடந்த வாரம் சனிக்கிழமை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் என ஆரம்பத்தில்  கூறிய மருத்துவமனை நிர்வாகம், 2 நாள் கழித்து, கடந்த திங்கட்கிழமை காலை திடீரென அவர் உயிரிழந்ததாக கூறியதுடன், அவருக்கு கொரோனா நெகடிவ் என கூறி சான்றிதழை கொடுத்துள்ளது.

மேலும், இறந்தவரின் உடலை, அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லலாம் என உறவினர்கள் கேட்க அதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், காவலர்கள் உதவியுடன், தூத்துக்குடியிலேயே தகனம் செய்ய வலியுறுத்தியதுடன், அன்று காலை 10 மணிக்கே தகனம்  மேடைக்கும் அனுப்பி வைத்துள்ளது. அவர்களுக்கு கால அவகாசம் வழங்காமலும், குடும்ப உறவினர்கள் இன்றி, இறந்தவரின் கணவர் மற்றும் மகள், மருமகன் ஆகியோர் முன்னிலையில் இறுதி யாத்திரை நடைபெற்றுள்ளது.  மருத்துவமனை மற்றும் காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கைகள்  இறந்தவரின் உறவினர்களிடையே பெரும் கோபத்தையும், ஆற்றாமையையும் ஏற்படுத்தி உள்ளது. 

இறந்தவருக்கு கொரோனா நெகடிவ் என்றால், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் என்ன சிக்கல்? அரசு யாரை ஏமாற்ற நினைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வசதிக்கு  தகுந்தவாறு, மருத்துவமனைகளும், அரசு அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். இது கிராமப்புற மக்களிடையே அரசு மீது கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், மற்றொருபுறம்  பணத்தை பெற்றுக்கொண்டு, சென்னையில் கொரோனா நோயால் உயிரிழந்தவரின் உடல்களை பலநூறு கிலோ மீட்டர் எடுத்துச்சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யுவும் அனுமதி வழங்குகிறது. இது என்ன நியாயம் என கேள்வி எழுப்பும் பொதுமக்கள்,  கொரோனா நோயாளிகள் இறப்பில், தமிழகஅரசு இரட்டை வேடம் போடுகிறது என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், இதை எந்தவொரு  மீடியாக்களும் பேச மறுத்து, மூடி மறைத்து வருகின்றன. கொரோனா இறப்பு  விவகாரத்தில் தமிழகஅரசு உண்மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும்  வலியுறுத்தி வருகின்றனர்.,

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு நெகடிவ் சான்றிதழ் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்து உள்ளார்.  கொரோனா முதல் அலையின் போது ஐசிஎம்ஆர் வகுத்த வழிகாட்டுதலின்படியே, கொரோனாவால் இறந்தவர்களுக்கு  இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும்  பதில் தெரிவித்துள்ளார்.

பொறுப்பான அமைச்சரின் பதில் வெற்றுச்பேச்சாகவே உள்ளது. இதுபோன்ற அவலங்களுக்கு  தீர்வு என்ன என்பதை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர, மறுத்து, மத்தியஅரசு மீது பழிபோடுவது எந்த வகையில் நியாயம்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது வருமோ என்ற அச்சத்திலேயே மத்திய, மாநில அரசுகள் கொரோனா உயிரிழப்புகளை மறைத்து காண்பிக்கின்றனவோ?