சென்னை: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28% ஆக உடனடியாக உயர்த்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுமுதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மத்தியஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 11 சதவிகிதம்  உயர்த்தி ஜூலையில் அறிவித்து உள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்றுயின் தாக்கம் காரணமாக பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, 1-1-2020, 1-7-2020, 1-1-2021 ஆகிய நாட்களிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இது 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தது.

இதனைப்பின்பற்றி தமிழகம் அரசும் அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது. தற்போது மத்திய நிதி அமைச்சகத்தின் 20-7-2021 நாளிட்ட ஆணையின் வாயிலாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17% லிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி, அதனை 1-7-2021 முதல் ரொக்கமாக வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, புதுச்சேரி அரசுகளும் தங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் என பட்டியலிட்டு நிதி அமைச்சர் அவர்கள் வெள்ளை அறிக்கையினை வெளியிட்டு இருப்பதைப் பார்க்கும்போது, தங்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாதோ என்ற அச்சத்தில், ஊழியர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாகவும், டீசல் விலை ரூ.95க்கும் விற்பனை செய்யப்படுகின்ற சூழ்நிலையில், அதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து செல்கின்ற நிலையில், மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்து 20 நாட்கள் கடந்த நிலையில், தங்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், இதில் தனி கவனம் செலுத்தி, மத்திய அரசின் அறிவிப்பிற்கிணங்க, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகலவிலைப்படியை 17% லிருந்து, 28% ஆக உயர்த்தி அதனை 1-7-2021 முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.