சென்னை:
அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக் இன்று 2வது நாளாக நீடித்து வருவதால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர் இன்றி புறநோயாளிகள் கடுமையான அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மழை நேரமாதலால், வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக, நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் போராட்டம் காரணமாக, சிகிச்சையின்றி நோயாளிகள் கடுமையான அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர்.
சம்பள உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அரசு இடையே நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில், மருத்துவர்களின் போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இதன் காரணமாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.