புதுடெல்லி: குறிப்பிட்ட 18 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 25% விற்பனை செய்வதன் மூலம், ரூ.15,000 கோடி நிதி திரட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் வருவாயைப் பெருக்கவும், நிதி நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு நடத்தும் நிறுவனங்களுடைய பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.1,05,000 கோடி நிதி திரட்டுவதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டில் இந்த இலக்கு ரூ.85,000 கோடி என்பதாக இருந்தது. இந்த நிதியாண்டில், செபி விதிமுறைகளை பின்பற்ற அரசு முயலும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகளை விற்பதற்கு அரசு முடிவுசெய்தபோது, அதை வாங்குவதற்கு யாரும் முன்வராததால், முழு பங்குகளையும் விற்பதற்கு அரசு தயாராக இருந்ததாக தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.