சென்னை:

ரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் டெட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கல்வி ஆண்டில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்று 58 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 8000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு  அரசு சம்பளம்  உள்பட அரசின் அனைத்து சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.ஆனாலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் கல்வி தரமும்குறைவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சில அரசு பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளுக்கு அரசு செலவு செய்தாலும் கல்வி தரம் குறைந்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.

அதனால் மாணவர்கள் இல்லாமலேயே ஆசிரியர்களுக்கு சம்பளமாக அரசின் நிதி வீணாவதாக பள்ளி கல்வியின் தணிக்கை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 35 பேருக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருந்தால் போதும். அதற்கு மேலும் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவற்றில் யாரையும் நியமிக்கக் கூடாது.

அந்த இடங்களை அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும் என அப்பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கலக்கத்தில் உள்ளன.