சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, காப்பாற்றும் வகையில் மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு  ரூ.5000 பரிசு வழங்கப் படும் என  மத்தியஅரசு  அறிவித்து உள்ளது.

சமீப காலமாக சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, மக்கள், அதை போட்டோ எடுப்பதிலும், வீடியோ எடுப்ப திலும், பின்னர் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்ற குதூகலிக்கின்றனர். மக்களிடையே உதவும் மனப்பான்மை குறைந்து வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.  இன்றைய டிஜிட்டல் உலகம் மக்களின் மனநிலை மாற்றி வருகிறது.

இதனால், எதிர்பாராத வகையில் சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் வகையில்,  அவர்களை உடனே அருகில் உள்ள மருத்துவமனை யில் சேர்ப்பவர்களுக்கு, இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும்.

இதுபோன்ற செயலுக்காக ஒரே நபருக்கு ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை  பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும்,   சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும என்றும்,   அனைத்து விபத்துக்களும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் “மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ” ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000 பரிசு தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு அக்டோபர் 5ந்தேதி அன்று மத்திய போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகஅரசு அதை ஏற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.