கோவை: கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கோ பேக் அமித்ஷா என்றும், பெரியார் அமைப்புனர் கெட் அவுட் அமித்ஷா என்ற பேனர்களுடன் கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டக்கார்களை கைது செய்த காவல்துறையினர், பின்னர் சில மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மாலை கோவை வருகை தந்தார். அவரது வருகையைக் கண்டித்து கோவை மாநகரில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பெரியார் தொண்டர்கள் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
கோவையில் நடைபெறும் ஈஷா மைய மகா சிவராத்திரி விழா மற்றும் பாஜக மாவட்ட அலுவலகங்கள் திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கோவை வருகை தந்தார். அவருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டப்படும் என காங்கிரஸ் உள்பட சில அமைப்புகள் அறிவித்திருந்தன.
அதன்படி, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பு மற்றும் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி தர மறுப்பு உள்பட பல்வேறு பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியார் அமைப்பினர் Get Out Amit Shah என்ற பதாதைகளுடன் போராட்டம் நடத்தினர். கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அவர்களை காவல்துறையினன்ர கைது செய்தனர்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி சார்பிலும் உள்துறை அமைச்சருக்கு எதிராக, மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. GoBack Amit Shah என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்.
மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கையால் தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஆபத்து என்று அதை ஏற்கவில்லை என்பதால் தமிழ்நாட்டிற்கு கல்விக்கு ஒதுக்கிய நிதி ரூபாய் 2152 கோடியை விடுவிக்காததைக் கண்டித்தும், இந்திய நாட்டின் சட்டசாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர், முன்னாள் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களை அவமரியாதை செய்ததை கண்டித்தும் கோயம்புத்தூர், காந்தி பூங்காவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கறுப்பு கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.