சென்னை: தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்..
தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தவெக கட்சியின் முக்கிய நபர்கள் மொத்தம் 300 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
இந்த தொடக்க விழாவில் நடிகர் விஜய், தனது அரசியல் கட்சிய்ன தேர்தல் அரசியல் வியூக வகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ள பிரசாந்த் கிஷோருடன் விழாவில் பங்கேற்றார். அவர் விழாவுக்கு வரும்போது, அவரது கட்சி தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.
முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து விழா மேடையில் இருந்து விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கீழே இறங்கினர்.
அதன்பின் அங்கு வைக்கப்பட்டு இருந்த பலகையில், ‘Get Out’ கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறது. இதனை முதல் கையெழுத்திட்டு விஜய் தொடங்கி வைத்தார்.
இதற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இதில், கட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை விஜய் கண்டு களித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சி நடக்கும் வழிநெடுகிலும் விஜய்யை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களிலும் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டுள்ள பேனரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்:
ஒருவர் பாட்டுப் பாட, மற்றொருவர் அதற்கு ஏற்ற ஒத்திசைவுடன் நடனமாட திரைமறைவு கூட்டுக் களவானிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகின்றனர்.
புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட தினிப்பொடு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம்.
1. பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெரும் துயரை கண்டும், காணாத பொறுப்பற்ற தன்மைக்கு #GETOUT.
2. விமர்சனத்திற்கு அஞ்சி கொடுங் கோலோடும் மக்களின் குரல்களை ஒடுக்கும் அரசியல் கோழைத்தனத்துக்கு #GETOUT
3. வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நய வஞ்சகர்களுக்கு #GETOUT
4. விளம்பரம் மற்றும் ஆட்சியின் அவலத்தை மடை மாற்றம் செய்வதையே நம்பி வாழும் திறனற்ற ஆட்சி நிர்வாகம் #GETOUT
5. சாமானியர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசியல் நோக்கோடுடன் ஊக்குவிக்கும் வகையில் செயலற்று இருப்பதற்கு #GETOUT
6. ஒரு சிலரின் பேராசை பசிக்காக நடக்கும் திட்டமிடப்பட்ட உழைப்பு சுரண்டலும், இயற்கை வளச் சுரண்டலுக்கும் கெட் அவுட்
. ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில், திமுகவினர் கெட் அவுட் பிரதமர் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் ட்ரெண்ட் செய்தனர். அதேபோல, கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில், ஒருசேர மத்திய, மாநில அரசுகளுக்கு ‘கெட் அவுட்’ சொல்லும் வகையில் கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்துள்ளார்.