தமிழகத்தில் உள்ள பாஜக-வினர் தொடர்ந்து தங்கள் இந்தி விசுவாசத்தை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், “இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?” என்று ‘அறிவுப்பூர்வமான’ வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!

தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!” என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழக மாணவர்களின் கல்விக்கு நிதி வழங்குவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் வந்து சவடாலாக கூறிவிட்டு சென்றார்.

அவரது இந்த பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறி இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதேவேளையில், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் மத்திய பாஜக அரசின் முடிவை எதிர்த்து குரல் எழுப்புவதற்கு பதிலாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழக பாஜக-வினர் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டம் குறித்து பாஜக விமர்சித்திருப்பதற்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேரடியாக களமிறங்கி பதிலளித்திருப்பது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.