பனாஜி:

னோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, புதிய முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பதவி ஏற்ற  பாஜக அரசு இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. இதில் 20 வாக்குகள் பெற்று  பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த 17ந்தேதி காலமானார். அதைத்தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் மோதின.

இதையடுத்து, பாஜக தனது கூட்டணி கட்சியினரை சமாதானப்படுத்தி, பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்தை புதிய முதல்வராக தேர்வு செய்தது.

பிரமோத் சாவந்த்துக்கு மாநில கவர்னர் மிருதுளா சின்ஹா நேற்று அதிகாலை  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  அதைத்தொடர்ந்து சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கோவா சட்டமன்ற கூட்டம் கூடியது. அதில், பாஜக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப் பில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து உள்ளதாகவும்,  அவருக்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.