கூட்டணிக் கட்சியை உடைத்து எம் எல் ஏக்களை பிடித்த பாஜக : கோவாவில் பரபரப்பு

Must read

னாஜி

கோவா மாநிலத்தின் பாஜக கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா கோமாந்தக் கட்சியை பாஜக உடைத்துள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவாவில் பாஜக கூட்டணி சார்பில் முதல்வரானார்.   புற்று நோய் காரணமாக அவர் மரணமடைந்த போது பாஜக கூட்டணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.   அப்போது மகாராஷ்டிர கோமாந்தக் கட்சி பாஜகவுக்கு ஆதரவை அளித்தது.

பாஜகவின் பிரமோத் சாவந்த் கோவா முதல்வராக இரவோடு இரவாக பதவி ஏற்றார்.  அத்துடன் மகோக (மகாராஷ்டிர கோமாந்தக் கட்சி) தலைவர் ராமகிருஷ்ண தாவல்கர் துணை முதல்வராக பதவி ஏற்றார்.   மகாராஷ்டிர கோமாந்தக் கட்சியில் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்கள் துணை முதல்வர் ராமகிருஷ்ண தாவல்கர். சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அஸ்கோவன்கர், மற்றும் தீபக் பவுஸ்கர் ஆகியோர் ஆவார்கள்.   அவர்களில் மனோகர் மற்றும் தீபக் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

கட்சித் தாவல் சட்டப்படி மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறுவது கட்சித் தாவல் ஆகாது.    ஆகவே இந்த இருவரின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறி போக வாய்ப்பில்லை.   இதனால் கோவா சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

கோவா சட்டப்பேரவையில் இப்போதைய நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சம எண்ணிக்கையில் உள்ளனர்.  இந்த இருவர் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கட்சித் தாவல் சட்டப்படி இருவரின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறி போகாது என உறுதி அளித்துள்ளார்.

மகோக வுக்கு அடுத்த அடியாக அக்கட்சியின் தலைவர் ராமகிருஷ்ண தாவல்கர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  தங்கள் கட்சிக்கு ஆட்களை இழுக்கவே அவருக்கு துணை முதல்வர் பதவியை அளித்து உடனடியாக அதை பாஜக பறித்துக் கொண்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புதியதாக பாஜகவில் இணைந்தவர்களில் மனோகர் அஸ்கோவன்கர் துணை முதல்வராகவும் மற்றும் தீபக் பவுஸ்கர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.   தற்போது பதவி நீக்கம் செய்யப்பட ராமகிருஷ்ண தாவல்கர் பொதுப்பணித் துறையை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article