இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தினால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.

maxwel

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதலில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து இன்று பெங்களூருவில் 2வது டி20 போட்டி தொடங்கியது. இதில் கட்டாயம் வெற்றிப்பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 6 ஓவர்களுக்குள் 50 ரன்களை கடந்தது. ராகுல் 47 ரன்களிலும், தவான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த ரிஷப் பண்ட் ஒரே ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனை தொடர்ந்து 4 விக்கெட்டுக்கு விராட் கோலியும், தோனியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் ரன் வேகம் உயர்ந்தது. கோலி அரைதசம் கடக்க, தோனி 3 பவுண்ட்ரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 72 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் ஸ்டோனிக்ஸ் 7 ரன்னுடனும், பின்ச் 8 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். அதையடுத்து வந்த ஷாக் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.