இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்த வெற்றிக்கு, இந்திய பேட்ஸ்மென்கள் எப்படி முக்கிய காரணமோ, அதைவிட ஒருபடி மேலாக, இந்தியப் பந்துவீச்சாளர்களின் பங்கு இருந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

ஏனெனில், புனே போன்ற சிறிய மைதானத்தில், 317 ரன்களை சேஸ் செய்வது ஒரு பெரிய விஷயமே அல்ல என்று சொல்லப்பட்ட நிலையில், இங்கிலாந்தின் துவக்க வீரர்கள், இந்தியப் பந்துவீச்சை வெளுத்துக் கட்டிய நிலையில், இறுதியில் அந்த அணியை 251 ரன்களுக்கெல்லாம் சுருட்டியுள்ளனர் இந்தியப் பந்துவீச்சாளர்கள்; ஒரு கேட்ச் மற்றும் ஒரு ரன்அவுட் வாய்ப்பு பறிபோனாலும்கூட.

நேற்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் நாள். புதிதாக அறிமுகமான பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு துவக்கத்தில் அடித்து வெளுக்கப்பட்டாலும், கேப்டன் கோலி, அவரை உடனே கைவிட்டுவிடவில்லை. அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கொடுத்தார்.

அந்த முடிவு சரிதான் என்று கூறும்வகையில், அவரும் திடீர் திருப்பமாக இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கடுத்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகுர் செய்ததுதான் மாயாஜாலம். இங்கிலாந்து மிகவும் வலுவாக இருந்த நிலையில், சதத்தை நெருங்கிய பேர்ஸ்டோ மிரட்டிக் கொண்டிருந்த வேளையில், அந்த பேர்ஸ்டோ உள்பட, கேப்டன் இயன் மார்கன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரையும் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து காலிசெய்து, இங்கிலாந்தின் முதுகெலும்பையே கிட்டத்தட்ட உடைத்துவிட்டார்.

அடுத்ததாக, சாம் பில்லிங்ஸ் மிரட்டுவாரோ என்று எதிர்பார்த்த நிலையில், அவரை அலேக்காக தூக்கினார் பிரசித் கிருஷ்ணா. அது அவரின் மூன்றாவது விக்கெட். பின்னர் 30 ரன்கள் எடுத்து ஆடிவந்த மொயின் அலியையும், அடில் ரஷித்தையும் புவனேஷ்வர் காலிசெய்ய, சுழற்பந்து வீச்சாளர் & ஆல்ரவுண்டர் கருணால் பாண்ட்யாவுக்கு ஆறுதல் விக்கெட்டாக கிடைத்தவர் சாம் கர்ரன்.

இதற்கடுத்து, இந்தியாவுக்கு தேவை கடைசி விக்கெட். வெல்லவே முடியாத நிலைக்கு இங்கிலாந்து எப்போதோ வந்துவிட்டது. ஆனால், கடைசி விக்கெட்டை தேவையில்லாமல் விட்டுவைத்தால் வெற்றி வித்தியாசத்தைக் குறைத்து விடுவார்கள்தானே! மறுபடியும் வந்தார் பிரசித் கிருஷ்ணா.

வந்தவுடன், முதல் பந்திலேயே  11 ரன்கள் அடித்திருந்த டாம் கர்ரனை தூக்கினார். அவ்வளவுதான், முடிந்தது இங்கிலாந்து அணியின் கதை!

நேற்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கிடைத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 9.

வேலைக்கு ஆகாத குல்தீப் யாதவ்!

சமீப நாட்களாக, தனக்கு கருணை அடிப்படையில் வழங்கப்படும் வாய்ப்புகளையெல்லாம் தொடர்ந்து வீணடித்து வருகிறார் குல்தீப் யாதவ். நேற்று 9 ஓவர்களை வீசிய அவர், 68 ரன்களை வழங்கியதோடு, 1 விக்கெட்கூட எடுக்கவில்லை. இதற்கு முன்பு, இவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளிலும் இவர் சொதப்பவே செய்தார். அநேகமாக, இவருக்கான கதவுகள் விரைவில் மூடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.