டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக ராகேஷ் திக்கத் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அரியானா மாநிலம் பால்வாலில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் மாலை 3 மணிக்கு தொடர்ந்து 1 நிமிடம் வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் 3 மணி நேர நாடு தழுவிய சக்கா ஜாம் முடிவடைந்த நிலையில் பாரதிய கிசான் சங்கத்தின் ராகேஷ் திக்கத்  கூறி இருப்பதாவது: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அக்டோபர் 2ம் தேதி வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்துள்ளோம்.

அக்டோபர் 2ம் தேதிக்கு பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்து விவசாயிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். நாங்கள் அரசுக்கு அழுத்தம் தர  மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.