நெட்டிசன் பகுதி: திரைப்பத்திரிகையாளர் மீனாட்சி சுந்தரம் அவர்கள், “கவிஞர் நா.முத்துக்குமார் நினைவலைகள்” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவில் இருந்து சில பகுதிகள்:

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

“கடந்த சில ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகில் அதிக பாடல் எழுதிய கவிஞர்
நா.முத்துக்குமார்தான்.  ஆனால் வீடு, அலுவலகம் இரண்டும் வாடகைதான். சொந்தமில்லை.
இதுபற்றி  ஒருமுறை உரிமையுடன் கேட்டேன். அதற்கு , “ ‘பாட்டு எழுதுவது சம்பாதிக்க அல்ல. என் நண்பர்களுக்காக ,தெரிந்தவர்களுக்காக,  என் திருப்திக்காக எழுதுறேன். நீங்க நினைக்கிற மாதிரி எல்லாரும் சம்பளம் கொடுப்பதும் இல்லை.  இவ்வளவு வேணும்னு நான் கேட்பதும் இல்லை” என்றவர், சிரித்தபடியே சொன்னார்: “முன்பெல்லாம் பேங்கில் போட்டால்தான் செக் பவுன்ஸ் ஆகும். இப் பவெல்லாம் தரையில் கீழே போட்டாலே பவுன்ஸ் ஆகிவிடுகிறது!”
ஒரு கவிஞனின் நிலை புரிந்தது.
இவரது திடீர் மரணத்துக்கு மஞ்சள் காமாலைதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது மட்டும் காரணமில்லை.
இரண்டு தேசியவிருதுகளை வாங்கிய அவர் ஓய்வில்லாமல் உழைத்து இருக்கிறார். இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் இரவில்தான் பாடல் கம்போசிங் செய்கிறார்கள். மாதத்தில் பல நாட்கள் அவர் துங்காமல் பாடல் எழுதிக்கொடுத்து இருக்கிறார். துங்காமல் கண்விழித்து பாடலில் திருத்தம் செய்து இருக்கிறார். ஓய்வில்லாமல் அவசரத்துக்காக நுற்றுக்கணக்கில் பாடல் எழுதியிருக்கிறார்.
அப்புறம், சினிமாதுறையினருக்கே உள்ள பழக்க வழக்கங்கள்…
நண்பர்கள் சந்தித்தால், பாடல் எழுத போனால், கம்போசிங் உட்கார்ந்தால்.. என சந்தோஷத்துக்கு, நிம்மதிக்கு, கம்பெனிக்கு, நட்புக்கு என அந்த பழக்க வழக்கங்கள்…
புத்தகங்களை நிறைய படித்தவர், தன் உடல்நிலையை படிக்க மறந்துவிட்டார்.
மகன் ஆதவன், மகள் யோகலட்சுமியுடன்
மகன் ஆதவன், மகள் யோகலட்சுமியுடன்

துக்கமின்மை, வேலைப்பளு, உட்பட பல விஷயங்களால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வின்றி உழைத்த அந்த கவிஞன் மஞ்சள் காமாலையில் விழுந்துவிட்டார். சில மாதங்கள் டாக்டரிடம் சிகிச்சை எடுத்து இருக்கிறார். ஆனால், மதுரைக்கு சென்ற இடத்தில் நண்பர்களுடன் சேர… மீண்டும் தவறு செய்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். மீண்டும் உடல்நிலையில் பிரச்னை. 41 வயதில் காலமாகிவிட்டார்.
காலத்தால் அழியா பாடல்கள் எழுதினார். புகழ்பெற்றார், தேசியவிருது பெற்றார். ஆனால்,  தனது குடும்பத்துக்கு பெரிதாக சேர்த்து வைக்கவில்லை. சொந்த வீடு இல்லை.  ஒன்பது வயது மகனின் எதிர்காலத்துக்கு  பணம் சேர்த்து வைக்கவில்லை. தனது தந்தை இவ்வளவு பெரிய கவிஞரா? என்று கூட தெரியாமல் இருக்கிறது அந்த 8 மாத பெண் குழந்தை.
இப்போது கூட நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதிக்கொடுத்து இருக்கிறாராம். அதில் எத்தனைபேர் பேமண்ட் கொடுத்து இருக்கிறார்கள். இனி கொடுப்பார்கள். கொடுக்காமல் செல்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
சில வார ங்களில் முத்துக்குமாரை மறந்துவிடுவார்கள். அவர் குடும்பத்தை மறந்துவிடுவார்கள். கேன்சரால் இறந்த இயக்குனர் ராசு.மதுரவன் குடும்பத்தை சினிமாகாரர்கள், நண்பர்கள் மறந்த மாதிரி….முத்துக்குமாரின் குடும்பத்துக்கு என்ன பதில்? எத்தனை சினிமாகாரர்கள் உதவப்போகிறார்கள்?”