திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்லும் பக்தர்கள், திறந்தவெளியில் விற்பனையாகும் உணவை சாப்பிட வேண்டாம் என  உணவு பாதுகாப்பு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சித்ரா பௌர்ணமி அன்ற கிரிவலம் செல்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் மகிழ்ச்சியை தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.  கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி   இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தரமான, சுத்தமான, சுகாதாரமான உணவு பொருட்கள் கிடைக்க வழிவகைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மேலும், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இலவச உணவுகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் மற்றும் கிரிவலப்பாதையில்  மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, திறந்தவெளியில் தின்பண்ட பொருட்கள் விற்பனை செய்தவர்கள், உணவு பொருட்களில் காலாவதி தேதி அச்சிடப்படாதவை போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கவர்கள், டம்ளர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் இதுகுறித்து செய்தியளார்களை சந்தித்த  மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், கிரிவலம் வரும் பக்தர்கள் திறந்தவெளியில் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 40 இடங்களில் அன்ன தானம் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 110-க்கும் மேற்பட்டவர்கள் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும் மக்கள் அன்னதானம் பெற்று சாப்பிட வேண்டும்.

அனுமதியின்றி அன்னதானம் வழங்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளிலும், கிரிவலம் வரும் பக்தர்களும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 12 சிறப்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வந்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அலுவலர்கள் அவர்களுடன் இணைந்து 4 குழுக்களாக திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 250-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. 55 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.