புயலால் சின்னாபின்னமானதால் மனிதர்கள் வசிக்க முடியாத பேய் நகரம் என்று அழைக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு அரை நூற்றாண்டு கழித்து பேருந்து வசதி கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ளது தனுஷ்கோடி. இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது.

1964ம் ஆண்டு வரை தனுஷ்கோடி மிக முக்கிய துறைமுகமாக செயல்பட்டு வந்தது. இலங்கைக்குச் செல்ல இங்கிருந்துதான் கப்பல்கள் புறப்படும்.
இங்கு மிகப்பெரிய ரயில் நிலையம் இருந்தது. இலங்கைக்குச் செல்பவர்கள் இங்கு வந்து, பிறகு கப்பலில் செல்வார்கள். மேலும், இந்துக்களுக்கு புனித நகராக விளங்கியது தனுஷ்கோடி. காசிக்கு புனித யாத்திரை சென்று வந்தவர்கள், தனுஷ்கோடி கடலில் குளித்தால்தான் பயணம் நிறைவடைவதாக ஐதீகம்.
துறைமுக நகர் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் உள்ள நகர் என்பதால் தனுஷ்கோடிக்கு எப்போதும் பயணிகள் வந்து சென்றபடியே இருப்பார்கள்.
ஆனால் இதெல்லாம் 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வரைதான்.

அன்று இவர் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது மிகப்பெரும் ராட்சத அலைகள் எழுந்து தனுஷ்கோடிக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 2000 பேர் வரை பலியானார்கள்.
தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. அந்த பாதையில் சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 123 பேரும் பலியானார்கள்.

பிரசித்தி பெற்ற ஊராக விளங்கிய தனுஷ்கோடி ஒரே நாளில் அழிந்தது. தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது.
அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம், சிதிலமடைந்த சில கட்டிடங்கள் மற்றுமே அங்கு ஒரு ஊர் இருந்ததற்கு அடையாளமாக தற்போது உள்ளன.
ஆனாலும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. தனுஷ்கோடிக்கு வரும் சில சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்கின்றனர்.

தனுஷ்கோடி கடற்கரையில் புனித காரியங்கள் செய்ய விரும்புவோருக்கு போக்குவரத்து வசதி இல்லாத நிலை. ராமேஸ்வரம் கோவிலில் இருந்து தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்பு முகாம் வரை மட்டுமே அரசு பேருந்து சென்று வரும். அங்கிருந்து தனியார் வாகனங்கள் மட்டுமே தனுஷ்கோடிக்கு செல்ல இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை 9.5 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் கடல் சீற்றம் காரணமாக சாலை சேதமடைந்ததால், அப்பகுதியில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், அப்துல்கலாம் நினைவில்லத்தைத் திறந்துவைக்க ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து தனுஷ்கோடிக்கு முதல் பேருந்து இயக்கப்பட்டது.
அதாவது, ராமேஸ்வரத்தில் இருந்து முகுந்தராயர்சத்திரம் வரை மட்டுமே சென்ற அரசு பேருந்துகள் தற்பது தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை சென்றன.
சாலை அமைப்பதற்கு முன், தனுஷ்கோடிக்கு ஜீப், வேனில் செல்ல ஒரு நபருக்கு ரூ.100 முதல் 150 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அரிச்சல்முனைக்கு ரூ.19 கட்டணத்தில் நகர பேருந்துகளில் சென்று வரலாம். இதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது.
பேய் நகரம் என்று அழைக்கப்படும் தனுஷ்கோடிக்கு 52 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து வசதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.