சென்னை

சென்னை ஆளுநர் மாளிகையில் பிரபலங்களை கவனிக்கும் பணியை செய்ய மறுத்ததாக மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு மாணவ்ர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலின் தாயார் உடல் நலமின்றி இருந்துள்ளார். ஆளுநர் மாளிகை மருத்துவமனை சார்பில் சென்னை பொது மருத்துவமனைக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டது. ராஜகோபாலின் தாயார் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவருடைய குடும்பத்தினர் அவரை இல்லத்துக்கு அழைத்துச் சென்று கவனிக்க முடிவு செய்தனர்.

இதற்கு மருத்துவர்களும் ஒப்புக் கொண்டதால் அவர் வீட்டுக்கு அனுப்பபட்டுள்ளார். அவருக்கு மூச்சு திணறல் இருந்ததால் அவரை கவனித்துக் கொள்ள பட்டமேற்படிப்பு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

வழக்கமாக பிரதமர் மற்றும் ஜனாதிபதிய கவனிக்க மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் அனுப்பப்படுவார்கள். ஆளுநருக்கு உதவி பேராசிரியர்கள் அனுப்பப் படுவார்கள். இது ஆளுநரின் உதவியாளரின் தாய் என்பதால் பட்ட மேற்படிப்பு மாணவர்களை அனுப்ப் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதை ஒட்டி மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் மெமோ அளித்துள்ளது.

இது குறித்து மாணர்கள், “நாங்கள் மாணவர்கள் என்பதால் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே பணி செய்ய விரும்பவில்லை. அப்படியும் நாங்கள் ஆளுநர் மாளிகைக்கு பணி ஆற்ற சென்றோம். நாங்கள் ஆளுநர் மாளிகை மருத்துவமனையில் பணி புரிவோம் என நினைத்தால் செயலரின் இல்லத்தில் பணி புரிய நேரிட்டது. அத்துடன் எங்களுக்கு போக வர வாகன வசதிகள் செய்யவில்லை. மற்றும் எங்களை யாரும் மரியாதையுடன் நடத்தவிலை” என தெரிவித்தனர்.

இதனால் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் போராட்டம் நடத்த தீர்மானித்தனர். மாணவர் மற்றும் மருத்துவ மனை நிர்வாகத்திடையே பேச்சு வார்த்தை நடந்த பிறகு இந்த மெமோவின் மீது எவ்வித நடவடிகையும் எடுக்கப்படாது என நிர்வாகம் உறுதி அளித்ததால் மாணவர்கள் போராட்ட முடிவை கைவிட்டனர்.