ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துணை வேந்தர்கள் தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக மீடியா ஒன் மற்றும் கைரளி நியூஸ் ஆகிய இரண்டு ஊடகங்கள் மீது ஆரிஃப் முகம்மது கான் கோபத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர் கூட்டத்திற்கு வந்த நிருபர்களிடம் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கும் மீடியா ஒன் மற்றும் கைரளி நியூஸ் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் யாராவது வந்திருந்தால் இங்கிருந்து வெளியேறுங்கள் என்று மிரட்டினார்.

ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் தான் வந்ததாக கூறிய அவர்களிடம், நான் சொல்கிறேன் வெளியேறுங்கள் என்று கூறி ஆரிஃப் முகம்மது கான் கடுமையாக சாடினார்.

இதனால் ஆளுநரின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவிர காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆளுநரை எதிர்த்து நாளை ராஜ்பவன் நோக்கி பேரணி நடத்தப்போவதாக கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.