சென்னை: கொரோனா மரபியல் குறித்து ஆய்வுசெய்ய சென்னையில் ஜெனோம் ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மூன்று தினங்களில் சோதனை முயற்சியாக ஆய்வகம் செயல்படவுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் சென்னை நந்தனம், அறிவியல், கலை கல்லூரியில் இன்று தொடங்கியது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்  கூறியதாவது,

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றை குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கையும்   எடுக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதை கண்காணித்து, மாநில எல்லைகளில் கொரோனா  சோதனைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தொற்று பரவல் ஏறி இறங்கி வரும் 13 மாவட்டங்களையும் கண்காணித்து வருவதாக தெரிவித்தவர், தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளோம். மாநிலத்தில்  இதுவரை மொத்தம் 3,06,74,681 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

செப்டம்பர் 1ந்தேதி கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படுவதால், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், நிகழ்வுகள் உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து ரத்த மாதிரிகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கொரோனா மரபியல் மாற்றங்களை ஆய்வுசெய்து கண்டறிய ஜெனோம் ஆய்வகம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக அடுத்த மூன்று தினங்களில் ஆய்வகம் செயல்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.