சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் முச்சந்திக்கு வந்துவிட்ட நிலையில், வரும் 11ந்தேதி அதிமுகபொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெற்றே தீரும் என எடப்பாடி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பொதுக்குழு நடைபெறாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே  எடப்பாடி தரப்பினர் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழை தலைமைக்கழக நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ளனர். அதில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் மாதம் 23ந்தேதி  அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 2190 கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரியப்படி, கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 11ந்தேதி நடைபெற உள்ளது.

வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசஜனபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டப்படுகிறது. இதில் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய அழைப்பிதழோடு, உரிய கொரோனா வழிகாட்டுதலுடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுக்குழு கூட்டத்தில், இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், கழக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, கூட்டம் கூடுவதை தடுக்க ஒருவேளை பொதுக்குழு கூட்டம் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டால், வீடியோ கான்பரன்சிங் மூலம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.