சென்னை: ஸ்டார்ட் அப் இந்தியா தர வரிசையில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக 2016ஆம் ஆண்டில் ஸ்டார்ட் அப் இந்தியா (Startup India) திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்குவது, ஸ்டார்ட் அப் தொடங்குவதை எளிமையாக்கு வது, வரி சலுகைகள் வழங்குவது உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

இதைத்தொடர்ந்து,  ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய  வர்த்தக-தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல், டெல்லியில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.

புதுமையான மற்றும் பரவலான தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகளுடன் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை முன்னெடுப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்த தரவரிசை பிரிவில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மேகாலயா மற்றும் கர்நாடகா இடம் பெற்றுள்ளன. முன்னணி செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் கேரளா, மராட்டியம், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகியவை இடம் பிடித்துள்ளன.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்பதிவிட்டுள்ளார். அதில், : தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாநிலங்களின் ஸ்டார்ட்அப் ரேங்கிக் 2021-ல் முன்னணி இடம் பெற்றமைக்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலத்தின் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது வழங்கப்பட்டமைக்காக எஸ்.நாகராஜன் மற்றும் திருமதி ஆர்.வி. சஜீவனா ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலத்தில் ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்துவரும் பல புதுமையான நடவடிக்கைகளினால், எதிர்வரும் ஆண்டுகளில் நமது மாநிலம் சிறந்த செயல்திறன் கொண்ட தரவரிசையில் மேலும் உயர முடியும் என நம்புகிறேன். டான்சிம் குழு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.