லண்டன்: சர்ச்சைக்குரிய வகையில், புகைபிடிக்கும் வகையிலான காளி போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலை, மத உணர்வுகளை தூண்டும்விதமாக இருப்பதால், அதை திரும்ப பெற வேண்டும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கைமூலம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இயக்குநர் லீனா மணிமேகலை. இவர்  தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார். இவர்  சமீபத்தில் அவர் தனது காளி என்ற  திரைப்படத்தின் போஸ்டரை அவர் பகிர்ந்திருந்தார். கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதாக இயக்குநர் லீனா மணிமேகலை  குறிப்பிட்டிருந்தார்.  இதில் இந்துக் கடவுளான காளியின் வேடத்தில் ஒரு பெண் புகைபிடிக்கும் விதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.  அதன் பின்னணியின் தன்பாலீர்ப்பாளர்களின் அடையாளமான வானவில் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உணர்வுகளை துாண்டும் விதமான போஸ்டரை  திரும்ப பெறக் கோரி வலியுறுத்தியுள்ளதாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “டோரோண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் ‘Under the tent’ திட்டத்தின் அங்கமாக வெளியிடபட்ட திரைபடத்தின் போஸ்டரில் இந்து கடவுள் அவமதிக்கப்பட்டுள்ளதாக கனடா வாழ் இந்து சமூக மக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளது.

டோரோண்டோவில் உள்ள தூதரகம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கவலையை தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு இந்து அமைப்புகள் சம்பந்தப்பட்ட அமைப்பை அணுகியுள்ளது. உணர்வுகளை தூண்டி விடும் விதமாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரை திரும்ப பெற வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் கனடா அரசிடமும் கேட்டு கொண்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லீணா மணிமேகலை மீது, பசுப் பாதுகாப்பு இயக்கம்  நடத்தி வரும், டெல்லியைச் சேர்ந்த அஜய் கௌதம் என்பவர்  டெல்லி காவல்துறையினரிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதியவும், படத்தின் மீது தடை விதிக்கவும் புகார் அளித்துள்ளார்.  மேலும் பல வலதுசாரி அமைப்பினர் பலரும் இயக்குநர் லீனா மணிமேகலைமீது புகார் கொடுத்து வருகின்றனர்.

தன்மீதான தாக்குதல்களுக்கு பதிலளித்துள்ள இயக்குநர் லீனா மணிமேகலை, `“எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.