தினகரனை ஒதுக்க பொதுக்குழு கூட்டமா?: எட்பாடி அணி மீது சம்பத் தாக்கு

சென்னை:

அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒதுக்க பொதுக்குழுவை கூட்ட திட்ட மிடுவதாக எடப்பாடி அணி மீது நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“இரண்டு ,மூன்று தினங்களாக வலைத்தளங்களிலும் ,ஏடுகளிலும் வந்து கொண்டு இருக்கிற செய்திகள் நெஞ்சில் வேலாகப் பாய்கிறது .டிடிவி தினகரன் ஓரம் கட்டப்படுகிறார்,அவரை ஒதுக்கிவைக்க முடிவு ,அவரை விரட்ட பொதுக்குழு என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

,கோடிநிலாக்களுக்கு குளிர்ச்சி தருகிற டிடிவி தினகரனை வைத்தே இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் சுழல்கிறது அவருடைய எச்சிலை எடுத்தே துப்புக்கெட்டவர்கள் அவர் மீது துப்ப முயற்சிக்கிறார்கள் , அவருடைய நிழலில் ஒதுங்கி உயிரே வாழ்ந்தவர்கள் அவர் பாதத்திற்கு கீழே பள்ளம் தோண்டுகிறார்கள்,

அவரை அவமானப்படுத்தவதிலும்,காயப்படுத்துவதிலும் சுகம் காணுகிற இடம் தேடிகள் எல்லாம் சாசுவதம் என்று நம்புகிறார்கள் .மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தது போல வரப்போகிற குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு குழிபறிக்க திட்டமிடுகிறார்கள் .

கட்சியின் பொதுச் செயலாளர் ,துணைப் பொதுச் செயலரும் தான் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல அதிகாரம் இருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள் .

இஸ்லாம் மார்க்கம் மானுடத்திற்கு மதிப்பு தந்த மார்க்கம் ஆண்டவனை தொழுவதற்கே பள்ளிவாசலில் இருந்து பாங்கு அழைப்பு வந்தால் தான் தொழுவதற்கு செல்வார்கள் ,கழகத்தின் சிறுபான்மை பிரிவு நடத்திய இப்தார் விருந்தில் எங்கள் துணைப் பொதுச் செயலருக்கு அழைப்பே இல்லை ,அவரை நெஞ்சம் நிறைய நேசிக்கிற லட்சக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் ஏன் எங்கள் தலைவனை நிராக்கறீர்கள் என நெஞ்சுடைந்து கேட்கிறார்கள் .

குடியரசு தலைவர் தேர்தலில் துணைப் பொதுச் செயலாளரை ஆலோசிக்காமல் ஏக மனதாக ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து யார் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்க டெல்லிக்கு பறந்து விட்டார்கள்.

ஆனால் தினகரன் அவர்கள் எல்லாநிகழ்வுகளையும் தனக்கு எதிராக வீசப்படுகிற கணைகளையும் கண்டும் கவலை இல்லாமல் இருக்கிறார்கள் .

தமிழ்நாட்டு அரசியலில் Shock Proof Politician TTV மட்டும்தான் .அதிகாரம் என்பது மணல்குன்றின் மீது உட்கார்ந்து இருப்பதுபோல ,வானம் தலைக்கு தட்டுப்படுவது மாதிரி அதிகார குன்றில் இருப்பவர் அர்ப்பதானமாக மகிழ்வர் ,மணல் குன்று சரிவது போல அதிகாரம் கையை விட்டு போகிறபொழுது இப்படி பட்டவர்களுக்கு கால் ஊன்றுவதற்கு கூட கன்னித் தமிழ்நாட்டில் இடம்கிடைக்காது .

சோதனை திருப்பி திருப்பிச் சுட்டாலும் ,சூழ்ச்சி சுற்றிச் சுற்றி வந்தாலும் சதி சலங்கை கட்டி ஆடினாலும் தவிர்க்க முடியாத தலைவர்கள் வரிசையில் டிடிவி தினகரன் நாளும் முன்னேறிக்கொண்டே இருக்கிறார் , நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் அல்ல அவ்வையும் ,அதியமானும் உலவிய தர்மபுரியில் இருந்து 1000 தொண்டர்கள் அவரை தேடி வருகிறார்கள்,

இன்று தமிழர்களின் மானம் காத்த சேதுபதி சீமையில் இருந்து அலையலையாய் , அணிஅணியாய் புறப்பட்டு கழக துணைப் பொதுச் செயலாளரை சந்திக்க நீண்ட தொலைவில் இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள் ,அவரை அவமானப் படுத்தப்படுத்தப் அவருடைய ஆகாயம் விரிந்து கொண்டே இருக்கிறது .

அவரை வெட்டி விறகாக்க துடிக்கிறவர்கள் முன்னால் அவர் விஸ்வரூபம் எடுக்கத்தான் போகிறார் .அவருடைய பகலை எந்த இருட்டும் விழுங்க முடியாது ,அவருடைய பயணத்தை எந்த முட்களும் தடுத்து நிறுத்த முடியாது , இதுவும் கடந்து போகும் என்கிற எங்கள் நம்பிக்கையை எந்த வல்லாதிக்கமும் சிதைத்து விட முடியாது .

நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் ஓடிக்கொண்டு தான் இருக்கும் , தேதிகள் கிழிபட உடன்படா விட்டாலும் நாளை வந்து தான் தீரும் !”

இவ்வாறு நாஞ்சி்ல் சம்பத் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


English Summary
General council meeting for TTV dhinakaran assigning? Sampath attack on Edappadi team