நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால் வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்ட வர் பார்வை இழந்த நிலையில் ஒரு குழந்தையோடு வருவார். இதுபற்றி தெரியவர, இதயம் பலஹீனமான இரண்டாவது மனைவியிடம் முதல் மனைவி வரலாற்றைப் பற்றிச் சொன்னால் அவர் குழந்தையை விட்டுவிட்டு இறந்து விடுவாரோ என்ற பயத்தில் இரு மகன்களுக்கு தந்தையாய் தவிப்பார். அதைவிட இன்னும் கொடுமையாக, தான் உயிரோடு இருப்பதையே முதல் மனைவியிடம் சொல்ல முடியாமல் நண்பர் பாலு என்கிற சிவாஜியின் அன்பு கட்டளையால் தடை விதிக்கப்பட்டு நிறுத்தப்படுவார்.
தமிழ் சினிமா கண்ட எண்ணற்ற ஆச்சரியமான பாத்திரங்களில் மிகவும் முக்கியமானது பார்த்தால் பசி தீரும் படத்தில் ஜெமினி கணேசன் ஏற்றிருந்த வேலு பாத்திரம். எல்லாவற்றையும் விட இரு ஆண்களுக்கு இடையிலான நட்பின் ஆழத்தை, வலிமையை எப்பேர்ப்பட்ட சூழலிலும் யாராலும் தகர்க்க முடியாது என்பதை மிக அற்புதமாக கட்டிய முதல் சமூக தமிழ் திரைப்படம். காட்சிக்கு காட்சி ஜெமினி இடம் நடிப்பில் ஒரு படி விழாமல் இருக்க வேண்டுமே என்ற தவிப்பை நடிகர் திலகத்துக்கு உருவாக்கி இருப்பார் ஜெமினிகணேசன்.. மற்ற முன்னணி நடிகர்களுக்கு இல்லாத ஒரே ஒரு சிறப்பம்சம் ஜெமினியி டமிருந்தது. தனித்து கதாநாயகன் என்றால் மிஸ்ஸியம்மா, பூலோக ரம்பை சதாரம்,மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம் வஞ்சிக்கோட்டை வாலிபன், கல்யாண பரிசு என பட்டையை கிளப்பி இருப்பார்.
ஆடிப்பெருக்கு, தேனிலவு கைராசி, பாக்கியலட்சுமி, கற்பகம், ராமு போன்ற படங்களில் அலட்டலே இல்லாமல் மென்மையான கதாநாயகனாக தன்னை வெளிப்படுத்திய விதம் பார்த்தவர்களுக்கு மட்டுமே பளிச்சென புரியும்.. இன்னொரு டாப் ஸ்டாருடன் இணையான பாத்திரம் என்றாலும் துவண்டுவிடாமல் அதிலும் துவம்சம் செய்து விடுவார். அதிலும் நடிகர் திலகம் சிவாஜியுடன் என்றால்,பதிபக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாவமன்னிப்பு.. அது ஒரு பெரிய பட்டியல். ஆனால் எம்ஜிஆருடன் முகராசி என்ற ஒரே படத்தில் மட்டுமே ஜெமினியா ல் நடிக்க முடிந்தது
1940களில் அறிமுகமாகி 2010 க்கு மேலும் நடித்து, நீண்ட நெடிய திரை வரலாற்றுக்குச் சொந்தக்காரர் ஜெமினி என்ற ஜாம்பவான். அவ்வை சண்முகியில் ஐயர் மாமி வேடத்தில் வரும் கமலஹாசனை பார்த்து உருகுவதையும் மேட்டுக்குடி படத்தில் கார்த்தி கவுண்டமணியுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதையும் பார்த்து ரசித்த இந்த தலைமுறைக்கு காதல் மன்னன் என்று போற்றப்படும் ஜெமினியின் ஆரம்பகால வரலாறு எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படித்தது பிஎஸ்.சி. கெமிஸ்ட்ரி. ஆனால் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு பிறகு, செய்தது ஜெமினி ஸ்டுடியோசில் புதுமுகம் நடிகர்களை தேர்வு செய்யும் பணி. அதனால்தான் ராமசாமி கணேசன் என்பவர், ஜெமினி என்ற அடையாளத்துடன் ஜெமினி கணேசனானார்.
சிவாஜியை போல் முதல் படத்திலேயே வெற்றிக்கொடி நாட்டாமல் எம்ஜிஆரை போலவே துண்டு துண்டு ரோல்களில் தலைகாட்டி கடுமையாக போராடியவர் ஜெமினி. 1947ல் மிஸ் மாலினி படத்தில் சின்ன ரோலில் அறிமுகமான ஜெமினிக்கு கதாநாயகன் ரோல் கைகூடவில்லை. ஆனால் கதாநாயகியான அப்போதைய முன்னணி நடிகை புஷ்பவள்ளியையே காதலால் ஸ்வாகா செய்து துணைவியாக்கிக்கொண்டார் . அலுமேலு என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே மணந்து பெண் குழந்தைகளை பெற்றுள்ள நிலையில்தான் இப்படி புஷ்பவள்ளி வந்து இணைந்தார்.
1952ல் ஆர்.எஸ். மனோகர் கதாநாயகனாக நடித்த தாய் உள்ளம் படத்தில் ஜெமினி கலக்கிய வில்லன் ரோல்தான் டர்னிங் பாயிண்ட். அதே ஆண்டு துவங்கிய மனம்போல் மாங்கல்யம் படத்திலோ, முதன் முறையாக கதாநாயகன் வேடம்.. விடுவாரா? படத்தின் கதாநாயகியான 16 வயது மைனரான சாவித்திரி ஏற்கனவே இரண்டு பேரை மணந்த ஜெமினியிடம் மனதைப் பறிகொடுத்தார். படப்பிடிப்பின்போதே காதல் வலை வீசி கரம் பிடித்தார். ஆனால் விவகாரம் மிகமிக ரகசியமாக இருந்தது. இதனிடையே 2 வது மனைவி புஷ்பவள்ளி, ரேகா (பின்னாளில் இந்தி திரைலயுலக கனவுக்கன்னி) என்ற குழந்தையை பெற்றுக்கொடுத்தார்..
இந்த சூழலுக்கு மத்தியில்தான் தொடர்ந்து கதாநாயகனாகி, ஆக்சன் ஹீரோ எம்ஜிஆருக்கும் நடிகர் திலகத்துக்கும் நடுவில் காதல் மன்னனாக அற்புதமாக வெற்றிக்கொடி நாட்டினார் ஜெமினி.
காலங்களில் அவள் வசந்தம்.. மயக்கமா கலக்கமா,.. மன்னவனே அழலாமா.. நிலவே என்னிடம் மயங்காதே…என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்று வரை ஜெமினியை ரசிகர்கள் மத்தியில் தாலாட்டத் தவறுவதேயில்லை.. ஜெமினியை பொறுத்தவரை எந்த பிரபல நடிகருடனும் சேர்ந்த நடிக்க தயங்காதவர்.. கொடுத்த பாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்துவிட்டு போகக்கூடிய வர்.
வல்லவனுக்கு வல்லவன் படத்தில் அசோகனுக்கு எதிராக வில்லன், சித்தி படத்தில் எம்ஆர் ராதா- பத்மினி ஜோடிக்கிடையே ஒரு சிறிய பாத்திரம்.. ஜெய்சங்கரின் நூற்றுக்கு நூறு படத்தில் காலேஜ் பிரின்சிபல் ரோல்.. முத்துராமனின் சுடரும் சூறாவளியில் பொறுப்பற்ற குடிகார சூதாடித்தந்தை ரோல்..இப்படி நிறைய உண்டு..
சோகம் என்னவென்றால், இத்தகைய சமரசமே அவருக்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் என்ற நிலையிலிருந்து இறக்கிவிடுவதற்கான வழியாகவும் அமைந்து விட்டது.. ஒரே ஆறுதலான விஷயம், ஜெமினி ஆரம்பகட்ட மற்றும் இறுதி கட்டத்திற்கு இடையிலான மத்திய கட்ட திரை வாழ்க்கையை அற்புதமாக செதுக்கியவர் இயக்குனர் கே பாலச்சந்தர்.
பூவா தலையா, தாமரை நெஞ்சம், காவியத்தலைவி, இரு கோடுகள் புன்னகை, வெள்ளி விழா என கேபி- ஜெமினி காம்பினேஷனில் பல படங்கள் இன்றைக்கும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடிக்கத் தவறுவதில்லை. 1974ல் தான் சொந்தமாக தயாரித்த நான் அவனில்லை படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வந்து பெண் களை மணந்து ஏமாற்றி செல்லும் பாத்திரத்தில் அவரது நடிப்பு அசத்தல் ரகம்..
ஜெமினி-கேபி- கமல் என்ற மூன்று ஆளுமைகளுக்குமே ஏதோ ஒரு வகையில் பிணைப்பு உண்டு. உன்னால் முடியும் தம்பி படம் வரை வரை அந்த இணைப்பு தொடர்ந்தது. கமலின் முதல் படம் ஜெமினியின் களத்தூர் கண்ணம்மா.. அன்று முதலே அவர் கமலை தனது பிள்ளைபோலவே கருத ஆரம்பித்தார்..பார்த்தால் பசிதீரும் படத்திலோ ஜெமினியின் இரட்டை குழந்தைகளாக கமலுக்கு முதன்முறையாக டூயல் ரோல் வேடம்..
பெற்றெடுக்காத பிள்ளை ஜெமினியால் குறிப்பிடப்பட்ட கமலும், பெற்றடுத்த ரேகாவும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள்.. இன்றுவரை பொலிவு மங்காதவர்கள்..
திரைப்படத்துறையை தாண்டி ஜெமினி இடம் போற்றப்பட வேண்டிய ஒரு விஷயம் உண்டு. ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் மண வாழ்க்கை நடத்திய அவர் தன்னுடைய எந்த வாரிசையும் சரியாக பராமரிக்க தவறியதில்லை. அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி நன்றாகப் பழகி விளையாடி பெரிய அளவில் படிக்க வைத்தார். சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து தன் வாரிசுகளுக்கு பொருளாதார பாதுகாப்பு ஏற்படுத்தி வைத்தார் திரை உலகில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் 103 வது பிறந்த நாள் இன்று…
Rerelease..