டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் சட்டவிரோதமாக ஃபாபிஃப்ளூ மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக, டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. டெல்லி மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆணையர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருவதால், தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் பாஜக எம்.பி.யான  கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம், ஃபாபிஃப்ளூ மருந்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்ததாகவும், இதை கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதாகவும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளார்.

போதைப்பொருள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ் டெல்லி எம்.எல்.ஏ பிரவீன்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், மேலும் முன்னேற்றம் குறித்த நிலை அறிக்கைகளை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மருந்து கட்டுப்பாட்டாளரை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  கவுதம் கம்பீர் அறக்கட்டளை சட்டவிரோதமாக கோவிட் மருந்துகளை சேமித்து வைத்துள்ளதாகவும், அந்த நிறுவனம் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  டெல்லி மருந்து கட்டுப்பாட்டாளர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதற்கான ஆவனங்களை சமர்ப்பித்தார்.

இதை படித்து பார்த்த  டெல்லி உயர்நீதிமன்றம் போதைப்பொருள் கட்டுப்பாட்டாளரை கடுமையாக சாடியது,பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் கோவிட் நோயாளிகளுக்கான பெரிய அளவிலான பாபிஃப்ளூ மருந்தை எவ்வாறு வாங்கினார் என்பதை சரியாக ஆய்வு செய்யவில்லை என்று கூறியதுடன், இந்த விஷயத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டாளர் மீதான நம்பிக்கை  கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது என்று கண்டித்ததுடன், இது தொடர்பான விரிவான விசாரணையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை  ஜூலை 29 அன்று விசாரணைக்கு  பட்டியலிட்டது.