சென்னை: வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்வு, வாகன எரிபொருட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, காபி, டீ உள்பட ஓட்டல்களில் விற்பனை இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகளின் விலை சில இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்,  மாநிலம் முழுவதும்  20 சதவீதம் வரை விலைகளை உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை, சமீபத்தில் 268 ரூபாய் உயர்ந்து, 2,406 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுபோல, பெட்ரோல் டீசல் விலையும் இன்று  11வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்கள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாட்டில் மிக அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.118ஐ கடந்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும் மத்திய  பாஜ அரசு கண்டுகொள்ளாமல், தொடர் விலையேற்றத்தை மேற்கொண்டு வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விலையேற்றம் சாமானிய மக்களில் தலையில் விழுந்து வருகிறது. ஏற்கனவே சில பகுதிகளில் டீ, காபி உள்பட உணவு பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும்  டீ, காபி , உணவுப் பண்டங்கள் ஆகியவற்றின் விலை நேற்று முதல் சற்று அதிகரித்துள்ளது.   ஒரு கிளாஸ் டீ  விலை ரூ.12 முதல்  ரூ. 15 வரை அதிகரித்துள்ளது.  முதற்கட்டமாக சென்னையில்  டீ விலை ரூ. 15 ஆக உயர்த்தப்படும் என்று தேனீர் கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல்   காபியின் விலை ரூ.15-ல் இருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.  இது டீ மற்றும் காபி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஓட்டல்களிலும் விலைகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு ஓட்டல்களின் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார்  தெரிவித்து உள்ளார். காஸ் சிலிண்டர் விலை உயர்வால்,  ஹோட்டல்களில் உணவு பொருட்கள் விலையை, 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் குறித்து விவாதிக்க, ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம், வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், உணவு பொருட்கள் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய திருச்சி டீ, காபி வர்த்தக நலச்சங்க அமைப்பாளர் ராவுத்தர்ஷா, கொரோனா பரவலுக்கு பிறகு வர்த்தக நிறுவனங்களில் 40 சதவீதம் வியாபாரம் குறைந்துவிட்டது. இப்போது தான் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறோம். அதற்குள் வர்த்தககியாஸ் விலை உயர்வு மேலும் சிரமத்தை அதிகரித்துள்ளது. டீ, விலை சமீபத்தில் தான் ரூ.12 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் வலையை உயர்த்துவது தொடர்பாக சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார்.