ங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில், அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் கிடைத்தது.

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது.

கும்பாபிஷேக நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

இக்கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோவில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது. ராஜேந்திர சோழன் கோவிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோவிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து “பெரிய கோவில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?” என கேட்டான். அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். “காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு” என நினைவு வந்தது. எனவே “கணக்கு விநாயகர்” என்று அழைக்கப்பட்டார். தற்போது “கனக விநாயகர்” எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.