சென்னை:
சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினர் வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் மழைநீர் வடிகால் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் ஆகியோர் மீது அபராதமும் இக்குழுவால் விதிக்கப்பட்டு வருகிறது. இக்குழுவினரால் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியில் 15 மண்டலங்களில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 58 மெட்ரிக் டன் அளவிலான கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. மேலும், மழைநீர் வடிகால்களிலிருந்து 32 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.