சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று காலை 11மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், ஜல்ஜீவன் இயக்கம் உட்பட ஏழு தலைப்புகளில் விவாதிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் சபைக்கூட்டம் இன்று காலை 11.00 மணி முதல் நடைபெற உள்ளது. அதன் படி, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சிமன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், இன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி Namma Grama Sabhai Mobile App” மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை இன்றே அளித்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திக்கு 11.10.2024 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.