விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நாகை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்…! போலீஸ் குவிப்பு… பதற்றம் நீடிப்பு

Must read

நாகப்பட்டினம்:

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நாகை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு  காவல்துறை யினரின்  பாதுகாப்பு வழங்கி வருவதால், கெயில் தனது பணியை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக 925 கி.மீ தூரத்துக்கு எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் வழியாகக் குழாய்கள் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக, அந்தத் திட்டத்துக்கு தொடக்கத்தில் தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை அளிக்கப்பட்டது. இருப்பினும், விவசாயிகளின் தொடர் எதிர்ப்பால் திட்டம் சரிவர செயல்படுத்தப்படாத நிலையில் இருந்து வந்தது.

விவசாய நிலங்களில்  கெயில் குழாய்கள் பதிப்பதனால், நீண்ட வேர்களைக் கொண்ட தென்னை, மா, பலா, வாழை, கொய்யா போன்றவற்றை விளைவிக்கக் கூடாது; வெங்காயம், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற ஆழம் செல்லாத வேர்கள் கொண்ட பயிர்களையே சாகுபடி செய்ய வேண்டும்; எரிவாயு குழாய்கள் செல்லும் 20 மீட்டர் பாதையில் வீடுகள், கட்டிடம், மரம், ஆழ்குழாய் கிணறு, கிணறு போன்றவற்றை அமைக்கக் கூடாது; பாதையின் ஒரு பகுதியில் இருந்து குழாய் மூலமாக விவசாயத்திற்கு தண்ணீரை மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்ல மேற்கண்ட பாதையினைத் தாண்டியும் செல்லக்கூடாது” எனப் பல கட்டுப்பாடுகளை கெயில் நிறுவனம் விதித்துள்ளது.

இதனால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மிகக் கடுமையாக இந்தத் திட்டத்தை எதிர்த்தனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே, ‘இந்தத் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்’ என்றார். ஆனால் தற்போதைய எடப்பாடி அரசு கெயில் நிறுவனத்துக்கு பாஜக மத்தியஅரசுடன் இணைந்து ஆதரவு அளித்து வருகிறது.

சமீபத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில்,  தற்போது  தரங்கம்பாடி அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி யுள்ளது.

ஹைட்ரோ கார்பன் குழாய் அமைக்கும் பணிகள் குறித்து விவசாயிகளிடம் அனுமதி கேட்காமலும், முன் அறிவிப்புகள் இன்றியும் பணிகளை தொடங்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

முப்போகம் விளையும் இடத்தில் ஹைட்ரோ கார்பன் குழாய்கள் பதிப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய விவசாயிகள், குழாய் வெடித்தால் யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி எடப்பாடி அரசின் காவல்துறை பாதுகாப்புடன்  குழாய் அமைக்கும் பணிகளை கெயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதையடுத்து நாகை மாவட்டம் காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

More articles

Latest article