டில்லி:

17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்த பிறகு கடந்த 20ந்தேதி முதல் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிட்டருக்கு 70 பைசா முதல் 80 பைசாவை வரை கூடியுள்ளது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ந்தேதி தொடங்கி மே 19ந்தேதியுடன் முடிவடைந்தது. அதுவரை பெட்ரோல் டீசல் விலை  உயராமல் நிலையாக இருந்த நிலையில், மே 20ந்தேதி முதல் மீண்டும் விலை உயர தொடங்கியது.  பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 பைசா அளவிலும், டீசல் விலை 73 பைசா அளவிலும் உயர்ந்து உள்ளது. நேற்று மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 பைசாவும், டீசல் விலை 5 பைசாவும் அதிகரித்தது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த ஆண்டு முதல் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகிறது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டு வருகிறது.