சென்னை

இன்று முதல் சென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழை இழந்தோருக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

“மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாகச் சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று  முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன.

அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.