சேலம்

கொரோனா பரவலைத் தடுக்க சேலம் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.  சேலம் மாவட்டத்தில் இதுவரை 94,059 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1,586 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 91,630 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் வைக்கும் பொருட்டு, மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் ஆகியவை மாலை 6 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை. மேலும் துணி, நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.

ஏற்காட்டுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை மேட்டூர் அணை பூங்காவிற்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.