டெல்லி: தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஸ்புட்னிக் ,பைஸர்  தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. விரைவில் ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கொரோனா தொற்று பாதித்தாலும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதால், தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இந்தியவர்களிடையே ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. தற்போது 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்க உள்ளது.

இந்த தடுப்பூசிகளான 2 டோஸ்களாக போடப்பட்டு வருகிறது. கோவாக்சின் முதல் டோஸ் போட்டு 28 நாளில் 2வது டோஸ் போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு 84 நாட்கள் கழித்து 2வது டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரே தடுப்பூசியே இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சில இடங்களில் தவறுதல் காரணமாக, முதல்டோஸ் ஒரு தடுப்பூசியும், 2வது டோஸ் வேறொரு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இதனால், பயனர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறு வேறு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த மாதம், இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழு, டிசிஜிஐ, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளின் கலவை அளவுகள் குறித்து ஆய்வு நடத்த பரிந்துரைத்தது. இந்திய மருத்துக்கட்டுப்பாடு அமைப்பும் ஆய்வு நடத்தியது. இதில் சிறப்பான முடிவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், முதல் டோஸ் கோவிஷீல்டும், இரண்டாவது டோஸ் கோவாக்சினும் செலுத்திக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.