டில்லி

ஷ்ய நாட்டின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி அடுத்த வாரம் முதல் இந்திய மக்களுக்குக் கிடைக்கும் என நிதி அயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருவதால் மூன்றாம் கட்டமாக மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

ஆனால் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறையால் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் பல இடங்களில் தொடங்கப்படாமல் உள்ளது.  இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யத் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.  இதுவரை ரஷ்யாவில் இருந்து 3 லட்சம்  டோஸ்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் நிதி அயோக் உறுப்பினர் வி கே பால், “ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.   அவை அடுத்த வாரத்தில் இந்தியாவில் மக்களுக்குக் கிடைக்க உள்ளன.  குறைந்த எண்ணிக்கையில் மருந்துகள் வந்த போதும் அடுத்த வாரம் முதல் இவை மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.