சென்னை: ஏப்ரல் 6ம் தேதி 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக இலவச வாகன சேவைக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருக்கிறது.

இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் நாளன்று ஊபர் நிறுவனம் (Uber) இலவச சவாரி வழங்குகிறது.

தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவதற்கும் ஜனநாயகக் கடமையை செயல்படுத்துவதற்கும் ஏதுவாக முதியோர்கள் (80 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையை தர ஊபர் நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

எனவே, வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் 2021-ல் மேற்படி இலவச சவாரி சேவையை சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது.

  1. மேற்கண்ட வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில், இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்குட்பட்டு பயணக் கட்டண அளவில் ரூ 200 வரை 100 சதவீதம் கட்டணத் தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.
  2. சவாரி செய்வோர் கைபேசியின் மூலம் ஊபர் செயலி வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
  3. எனவே, 80 வயதிற்குமேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விருப்பத்தின்பேரில், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.