சென்னை: தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த திட்டம் 60 நாள்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும், விவசாய உற்பத்தியை பெருக்கும் நோக்குடன், ஒரு இலட்சம் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்காள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்  தகுதியுடைய விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில், மேலும்  50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 60 நாள்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் மின் புதைவட கம்பிகள் பதிக்கும் பணி இரண்டு மண்டலங்களில் முடிவுற்று உள்ளது. வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது அலகு 800 மெகாவாட் திட்டம் டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என்றவர்,  எண்ணூரில் இரண்டு மற்றும் மூன்றாவது அலகு 1,320 மெகாவாட் திட்டமானது 2024-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதத்தில் முடிக்கத்திட்டமிட்டு உள்ளதாகவும், உப்பூர் மற்றும் உடன்குடி மின் திட்டங்களை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.