கவுகாத்தி:

அஸ்ஸாமில் ரெயில் மோதி 4 யானைகள் பலியாயின.

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டம் ஹவாய்பூர் ரெயில்நிலையம் அருகே வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு யானைகள் கூட்டமாக சுற்றத்திரிந்தன. அப்போது அதில் 5 யானைகள் தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியாக அதிவேகத்தில் சென்ற கவுகாத்தி-சில்சார் பயணிகள் ரெயில் யானைகள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் யானைகள் தூக்கி வீசப்பட்டது. சம்பவ இடத்திலேயே 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் ஒரு யானை ஆபத்தான நிலையில் உள்ளது.

யானைகள் மீது மோதி வேகத்தில் ரெயில் இன்ஜின் தடம் புரண்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த இடம் யானைகள் நடைபாதை என அடையாளம் காணப்பட்ட பகுதியாகும். அஸ்ஸாமில் ரெயில் மோதியும், விஷம் வைத்தும், மின்சார வேலியில் சிக்கியும் யானைகள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது.

2016ம் ஆண்டில் 110 யானைகளும், 2015ல் 118 யானைகளும் பலியாகியுள்ளன. 70 சதவீத வனப்பகுதியை இழந்தது தான் யானைகள் பலியாவதற்கு காரணம். இதனால் விலங்குகள் கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.

‘‘யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து எச்சரிக்கை கொடுக்க கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்புக்கு சிறப்பு படை ஏற்படுத்தி, உள்ளூர் மக்களுடன் இணைந்து இந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்படும்’’ என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.