சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்தித்து பேசினார். இந்த ஆலோசனையின்போது, தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இடம்பெற்றிருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பொறுப்பேற்றதும், கடந்த ஜூன் 21ந்தேதி தொடங்கிய சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தொடரில், அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோக்கின் உரையின்போது,  தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதாகவும், இதை மாற்றியமைக்கும் நடவடிக்கையாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராக ரகுராம் ராஜனும் (முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்)  உறுப்பினர்களாக எஸ்தர் டஃப்லோ (நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்), அரவிந்த் சுப்பிரமணியன் (ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்), ஜீன் ட்ரெஸ் (ராஞ்சி பல்கலைக்கழகம், டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்), டாக்டர் எஸ் நாராயண் (முன்னாள் நிதித்துறை செயலாளர்)  ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவரான ரகுராம் ராஜன் சந்தித்து பேசினார். அவருடன் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்பிஐ முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனை குழு! கவர்னர் உரையில் தகவல்…