சென்னை: தமிழகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.‘
தமிழ்நாடு 16வது சட்டமன்றப் பேரவையின்  முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது.  காலை வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார்.
ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
‘தற்போது பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் வெற்றி அண்ணல் அம்பேத்கர் வகுத்த மக்களாட்சி மாண்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும், சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்றவை இந்த அரசின் கொள்கைகள் என்றும் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 60 ஆண்டுகள் சட்டபேரவையில் அரும்பணியாற்றினார் என்றும் அவரின் கொள்கைகளின் படி இந்த அரசு வழிநடக்கும் என்றும் மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றில் இந்த அரசு உறுதியாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதாகவும், இதை மாற்றியமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தின் நிதிநிலை கவலையளிக்கும் நிலையில் இருப்பதாகவும், நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்க ஜூலை மாதம் வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிடும்.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் அடங்கியமுதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக ரகுராம் ராஜன், உறுப்பினர்களாக எஸ்தர் டஃப்லோ (நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்), அரவிந்த் சுப்பிரமணியன் (ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்), ஜீன் ட்ரெஸ் (ராஞ்சி பல்கலைக்கழகம், டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்), டாக்டர் எஸ் நாராயண் (முன்னாள் நிதித்துறை செயலாளர்)  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகமும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்  என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.  மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் துணை நகரங்கள் உருவாக்கப்படும். சென்னைக்கான மூன்றாவது பெருந்திட்டத்தை தயாரிக்கும் பணிகள் 2026-ம் ஆண்டிற்கு முன்னரே முடிக்கப்படும்.

சாதி, மத பிரச்சனைகள் இல்லாமல் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு காவல்துறையினருக்கு தேவையான பயிற்சிகளை அரசு வழங்கும் என்றும் அரசின் செலவினங்களை பாதிக்ககூடிய எண்ணற்ற நிலுவை வழக்குகள் விரைவில் தீர்வு காண இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் அடிப்படையில் 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைத்து அந்த குழுவின் பரிந்துரையின்படி சென்னை – கன்னியாகுமரி பெருவழியிலும், சென்னை பெங்களூர் தொழில் பெருவழியிலும் தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களிலும் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நவீன தொழில் நுட்பங்களையும் கழிவுகளையும் பயன்படுத்தி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பான சுகாதாரமான பணிச்சூழல் உருவாக்கித் தரப்படும். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளில் தமிழக உரிமைகள் பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுமாரும் தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறும் கேரள அரசையும் மத்திய அரசையும் தமிழக அரசு வலியுறுத்தும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு மறுவாழ்வு மற்றும் ஆதரவளிக்கும் திட்டங்களின் பயன்கள் சரியாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக அதிக இடங்களில் களப்பணியாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வலுப்படுத்தப்படும்.

திருநங்கைகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.