ஓசூர்:
முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் ஏமாற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டியது. அதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகினார்.

அவரை பிடிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 9 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். தமிழகத்தில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ளாரா என தனிப்படையினர் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் சென்று இருந்தார்.

இந்த நிலையில் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் பதுங்கி உள்ளார் என்ற தகவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓசூர் பகுதியில் உள்ள ரிசார்ட், சொகுசு விடுதிகள் அதேபோல பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் உள்ளாரா என்பதை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியை  ஓசூரில் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.

வரும் 6ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.