சென்னை: இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு முந்தைய வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளிவருவது சிக்கலாகி உள்ளது.

வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டுப்போட வந்ததாக கூறி திமுக நிர்வாகியை அரைநிர்வாணமாக அழைத்து சென்று தாக்கியதாக கூறப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறைச்சாலையில் அடைக்கப்ட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் மார்ச் 7 ஆம் தேதி வரை உள்ளது.

இந்த  நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஜாமீனில் விடுவிக்க கோரும் மனு மீது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மற்றொரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராயப்புரத்தில் திமுக அரசுக்கு எதிராக  சாலை மறியலில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக ஜெயக்குமார் முந்தை வழக்கில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டாலும், அவர் தற்போது சிறையில் இருந்து வெளியே வருவது கடினம் என்று கூறப்படுகிறது.