தருமபுரி: முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில்  திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி கைப்பற்ற திமுகவும், ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மற்றொரு புறம் கமல்ஹாசன், சீமான், டிடிவி தினகரன் போன்றோரும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

அதிமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தருமபுரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தருமபுரி மாவங்டடம் பாலக்கோடு பகுதியில் போட்டியிடும் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்தும், பென்னாகரம் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி, தருமபுரி பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கும் வாக்கு சேகரித்தார்.

அதனைத்தொடர்ந்து, காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், தனது ஆதரவாளர்களுடன்  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.  நிகழ்ச்சியில்,  பேசிய முதலமைச்சர், தருமபுரி மாவட்டத்தில் தனக்கென ஒரு தனி செல்வாக்கை பெற்றிருக்கும் முல்லைவேந்தன், நமது ஆட்சியில் விவசாயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கட்சியில் இணைந்துள்ளார்” என்று கூறினார்.

கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்த நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக முல்லைவேந்தன் திமுகவில் இரந்து  நீக்கி வைக்கப்பட்டார். அதுபோல கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கருப்பசாமி பாண்டியனும் நீக்கி வைக்கப்பட்டிருந்தார்.

பிறகு,  திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.